Tuesday, 24 May 2011

உலகங்களுக்கு இடையிலான இடைவெளியும் மற்றும் நீயும் நானும்...!!

(தொடர்ச்சி)

4.

சற்றே வெளித்திருந்தது வானம். கோடை காலத்தின் ஆரம்பமாதலால் கருக்கலிலேயே விடிந்து விடுவதும், இரவு எட்டுமணிவரை அந்திமாலையின்
வெளிச்சம் விரவிக் கிடப்பதும் இயல்பு. எனினும் இந்தக் கோடை எம்மை ஏமாற்றிக் கொண்டு திரிந்தது. விட்டுவிட்டு தூறும் மழை, எதிர்பாரா கும்மிருட்டு, லேசான குளிர் என்று தன்பாட்டுக்கு கரைச்சல் தந்து கொண்டு அலைந்தது காற்று. நான் அதிகாலையிலேயே எழுந்துவிட்டிருந்தேன். உன்னுடன் பேசும் அவசரம் என்னை எழுப்பி விட்டிருந்தது. ஆனால் எனக்குத் தெரியும், நேற்றிரவும் எங்கோ ஓர் தொலைவில் நீ உன் கனவுகளுடன் பேசியபடி நடந்து போயிருப்பாய். அங்கே தூங்கி எழுவது உனக்கு சௌகரியப்பட்டிருக்காது. ஏனெனில் நீ உனக்கான ஒரு உலகை யாசித்தபடியிருந்தாய். அந்த உலகிலாவது உறவுகளுக்கு உண்மையாக இருந்து கொண்டே எல்லோரையும் துயரமற்ற பாதையொன்றின் வழி நடத்திச் செல்வதைப்பற்றியே உன் எண்ணமெல்லாம் குவிந்திருந்தது. அவற்றை செய்யச் சொல்லி உன்னை வழிநடத்தும் உன் கனவுகளையும், கற்பிதங்களையும் உருவம் கொடுத்துப் பிறப்புவிக்க நீ தினமும் துயரனுபவித்தாய். உன் துயரங்களில் நான் முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்று புரிகிறது. நான் எனக்கென்று வழங்கப்பட்ட உலகில் தப்பிப் பிழைத்தலை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டேனோ?

பெயர் தெரியா மரமொன்றில் இருந்து வாய்க்குள் நுழையாப் பெயர் கொண்ட பூவொன்று ஊதா நிறத்தில் கொத்துக் கொத்தாய் உதிர்ந்து கிடந்தது ஆஸ்பத்திரி நுழைவாயில் எங்கும். எனக்கு ஊர் நினைவு வந்தது. ஊரில் ஆஸ்பத்திரி என்றாலே இப்படி பூ, இலை உதிர்க்கும் சில பல பெரிய மரங்களும், டெட்டோல் மணமும், கூடவே துக்கம், வலி, பிரிவு, மரணம், பிறப்பு இத்யாதிகளை அடக்கிய ஒருவித அமானுஷ்ய அமைதியும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஓரமாய் ஒதுங்கி சிலதினங்களுக்கு முன் பிறந்து இன்று வீடேகும் குழந்தையையையும் அந்தப் புதுவரவைக் கொண்டாடிக் கொண்டே நகரும் குடும்பத்துக்கும் வழி விட்டவாறே அப்படியே நின்றேன். குழந்தைகள் தம் பிறப்புடன் ஏதோ ஒரு செய்தியைக் கொண்டுவருகின்றன. அது சந்தோசமானதாகவோ, துயரமானதாகவோ, ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ, அப்படி இல்லை என்றோ அமைந்துவிடுவதை எங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அது எங்கள் தோல்வி. குழந்தைகளை எங்களுக்கு ஏற்றது போல செதுக்குவதையும் எங்களின் இன்னொரு பிரதிநிதியாக மாற்றுவதிலும் நாம் முழு மூச்சுடன் இறங்கிவிடுகிறோம். அதில் வெற்றி பெற்றதாக நாம் நினைத்துக் கொள்கிறோம், இல்லை அதில் ஏற்படும் சின்ன தளம்பலையும் ஏற்றுக் கொள்ள நாம் தயாராகவே இல்லை. அதை நினைத்து நினைத்து உள்ளுக்குள்ளேயே மறுகி எம்மைத் திட்டி சபித்துக் கொள்கிறோம்.

"என் குழந்தைகளை அவர்களாகவே வளர்ப்பேன்" - இது நீ,

"ஆமாம், நானும் தான்..; இப்படி பார்த்துப் பார்த்து ஒப்பிட்டபடியே வளர்க்கப்படுவது எரிச்சலாக இருக்கிறது இல்லையா,"

"yeah, அவை என்னவாக விரும்பினமோ நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். தங்கட திறமை என்ன எண்டு கண்டுபிடிச்சு அதில போகட்டும். அது தான் சரி. எங்களுக்கு கிடைக்காதது அவைக்கு கிடைக்கட்டும் எண்டு சொல்லி அவையளைக் கஷ்டப்படுத்திறது சரியில்லை, என்ன சொல்றீங்க?"

"Yeah, Thats true.." நான் மௌனமானேன். "என் குழந்தைகளை நீங்களே வளர்த்துத் தாங்களேன்; (புன்னகைத்தேன் என்று நினைக்கிறேன்) என்னால் முடியுமென்று நினைக்கவில்லை. நிறைய செல்லம் குடுத்து சீரழிச்சிடுவன் என்று எனக்கு நல்லாவே தெரியுது.."

"அதுதான் நான் முதல்லேருந்தே சொல்லுறன், பிறந்து கொஞ்சம் வளந்தோன்ன கொண்டந்து விடுங்கோ, நான் வளர்க்கிறேன்." சொல்லிக் கொண்டே நீயும் சிரித்தாய்.

எம் கண்கள் முழுவதும் கனவுகள். கண்ணிமைகள் மூட எத்தனித்தால் அவை முடியாமல் திணறிப் போகும் அளவுக்கு கனவுகள். ஒரு நாள் முழுதும் கூடி அலைந்து பேசித் தீர்த்தாலும் வீடு வந்ததும் அலைபேசியை காதுக்குள் செருகிக் கொண்டே விடிய விடிய பேசிக்கொண்டிருக்கும் வரைக்குமான கதைகளும், சம்பவங்களும், திட்டங்களும் நிறைந்து கிடந்தன எம்மிருவருக்குள்ளும். உன் பெயரை நான் சொல்லி அழைப்பதில் நீ அடையாளம் கண்டு கொள்வாய் நான் எதைப் பற்றி அல்லது எந்த சூழ்நிலையில் உன்னை அழைக்கிறேன் என்று, அதேபோல் நானும். என் குரல் பலதடவைகள் விரக்தியாய், முறைப்பாடு செய்யும் தொனியிலேயே ஒலிக்கும்.

"சே, என்ன குளிர்? சூரியனைக் கண்ணில காணவே இல்லை, கண்டாலும் சூரியனா இது என்றிருக்கு. என்னால இங்க காலந்தள்ள முடியாது. காய்ச்சல், தடிமன் என்று இந்த அவஸ்தை, முடியல..."

எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு பதிலாய் ஆரம்பிப்பாய்,

"Yeahma, I understand..ஆனா கொஞ்ச காலந்தானேம்மா, அங்கால Summer,..Everything will be just fine.."

எல்லாம் சரியாக இருந்ததா நமக்கிடையில்? இப்படி காலநிலை போலவே எல்லாம் சரியாகிவிடுமென்று எண்ணியிருந்தாயா?

வெள்ளைப் போர்வைக்குள் அமைதியாய்த் தூங்கிக் கொண்டிருந்தாய். வெளியே துருத்திக் கொண்டிருந்த உன் கையில் இரத்தம் எடுத்தற்கான அடையாளமாய்ப் பஞ்சும், பிளாஸ்திரியும் ஒட்டப்பட்டிருந்தன. விரல்களைப் பிரித்து என் ஒரு கையுடன் பிணைத்துக் கொண்டு மறு உள்ளங்கையால் மூடினேன். வெதுவெதுப்பாக, கொஞ்ச நேரத்துக்கு முன்னே பிறந்து தாயின் மார்பில் போட்ட குழந்தையின் சூடு. நீ திடுக்கிடுவதாய் சரிந்து படுத்தாய். இப்படி நான் மட்டும் தான் செய்வதாய் நீ சொல்லியிருக்கிறாய். என் கைகள் எப்போதும் குளிர்ந்துகொண்டிருக்கும். சேர்ந்து நடக்கும்போது, அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது நான் என் கைகளை இயல்பாக தேய்த்து கன்னத்தில் வைப்பதைக் காணும்போதெல்லாம் அதை செல்லமாய் குறிப்பிட்டபடி என் உள்ளங்கைகளை உன் கைக்குள் பதுக்கிக் கொள்வாய். நான் அதிகம் வெறுக்கும் குளிரை ஒதுக்கித் தர நீ இருக்கிறாய் என்பதாய் இருக்கும் உன் தொடுகையின் அர்த்தம். நான் வெறுக்கும் பலவற்றில் இருந்து என்னை வெளியேற்றினாய் இவ்வாறாக, நீ எதை மோசமாக வெறுக்கிறாய் என்பதை நான் அறியாமல் இருக்கத்தக்கதாகவே..

கண்விழித்து கண்களாலேயே புன்னகைத்தாய். ஒரு வாரமாய் நீ தொலைத்த தூக்கம் கண்களின் கீழே புகையாய்ப் படர்ந்திருந்தது. களைத்த சோர்வான பார்வை என் முகத்தில் படிந்து மழைத்துளிகள் ஒடுங்கி வழிந்து கொண்டிருந்த யன்னலில் ஒதுங்கியது. உன்னை இப்போது தான் உண்மையிலேயே தொலைத்துவிட்டதாய் உணர்ந்தேன். கலைந்து போயிருந்தாய். உன்னை அறிந்துகொண்டதாய் நான் எண்ணியிருக்கும் இந்த நான்கு வருடங்களிலும் உன்னை முழுதாய் அறிந்ததாய் நான் இறுமாந்திருந்தேன். அவையும் கூடவே கலைந்து போயின.

எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு உனக்கருகில் அமர்ந்தேன்.

"எப்ப வந்தீங்க.?"

"இப்பதான்,...நல்ல நித்திரை போல.."

"Yeah,.." (மௌனம்)

"சாப்பிட்டாச்சா?.."

ஏதாவது கதைத்து அந்த மௌனத்தை, அந்த இடைவெளியை, அந்த கனதியை அறுத்து எறிய வேண்டுமென்ற தீவிரம் என்னுள் கிளர்ந்து எழுந்தது. வார்த்தைகள் பின்னடித்தன. தொண்டைக்குழிக்குள் சிக்கி அமர்ந்து அழிந்தன.

"lunch சாப்பிட்டாச்சு, இனி இரவுக்கு தருவினம் என்று நினைக்கிறேன்.."

"பசிக்குதா?, இங்க கீழ ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளலாம். Nurse இட்ட கேட்டனான், ஏதாவது வாங்கிக் குடுக்கலாமா எண்டு, ஓம்; சாப்பிடலாம் என்றவ..."

"இல்லை, Thanks for asking, எனக்குப் பசிக்கேலம்மா, உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கலாமே..இங்க வைச்சு சாப்பிட்டிருக்கலாம்.."

"நான் சாப்பிட்டுட்டேன்.." பொய் சொன்னேன். நீ நீயாக இருந்திருப்பின் இதைக் கண்டுபிடித்திருப்பாய். உள்ளுக்குள் ஏதோ இழை அறுந்ததாய்ப்பட்டது.

மீண்டும் மௌனம். நீண்டதாய் மௌனம். நான் ஏதாவது சொல்ல வேண்டுமென்று நீயும், நீ ஏதாவது பேசவேண்டுமென்று நானும் நேர்ப்பார்வைகளைக் கவனமாகத் தவிர்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம். நீ இந்த உலகத்தை, உன்னுடைய உறவுகளை மாற்ற முயற்சித்திருந்தாய். அந்த முயற்சி மனித இயல்பு என்றறிவிக்கப்பட்டிருந்தவற்றைவிட வித்தியாசமானதாக இருந்தது. உன் அனுபவங்களில் பல உவப்பூட்டுவனவாகவோ ஏன் சாதாரணமாய் மனித மனத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாகவோ இருந்திருக்கவில்லை. அவற்றிலிருந்து விலகிப் போக, அவற்றின் பிரகாரம் எழுதப்பட்ட உன் வாழ்க்கையை திருத்தி எழுதிப் பார்க்க நீ போராடிக் கொண்டிருந்தாய். உன் போராட்டத்துக்கான சூத்திரம் உன்னால் எழுதப்பட்டது. உன்னிடம் மட்டுமே அதன் வெற்றியும், தோல்வியும், முடிவும் கையளிக்கப்படும். போராட்டத்தின் நிலையை உன்னால் மட்டுமே உணரப்படக் கூடியதாய் இருக்கிறது இப்போது. என்னால் அதற்குள் நுழையவே முடியவில்லை. ஒரு நீர்க்குமிழிக்குள் உடலைக் குறுக்கி தாயின் கர்ப்பத்துக்குள் இருக்கும் குழந்தை போல நீயிருக்க, இப்போது உன்னை நான் காண்கிறேன். நீ தேடியவற்றை இந்த மெல்லிய படை தந்துவிடுமா? சொல்?

நீர்க்குமிழியை எப்படித் தொட்டால் உடையாது, அதே கணத்தில் உன் கைகளைத் தொட்டு என் கைகளுக்குள் புதைத்துக் கொள்ள முடியும் என்று யோசித்தவாறே நிற்கிறேன் நான். காற்றின் வேகத்தில் ஆடி, உரு மாறி மீண்டும் வளைகிறது உன்னைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய படை. உள்ளிருந்தே என்னைப் பார்க்கிறாய், புன்னகைக்கிறாய், கலைந்து போகிறாய், குமிழி அதிரா வண்ணம் மெலிதாய்க் கிசுகிசுக்கிறாய். நீ பேசுவது கேட்கிறது எனக்கு. உன் வேண்டுகோள்கள் நியாயமானவையாக, தேவையானவையாக இருக்கின்றன. உன்னைப் புரிந்து கொள்வதாய், உனக்குத் தேவைப்படும் அனைத்தையும் அப்படியே செய்து தருவதாய், உன்னுடனே பயணிப்பதாய் வாக்குறுதிகளை மட்டுமே வழங்க முடிகிறது. என் வாக்குறுதிகளை நான் காப்பாற்றுவேன் என்பதை சில சத்தியங்கள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்கிறாய். என் சத்தியங்களைக் காப்பாற்ற எனக்கென்று இறுதியாய் கூடவாவது இருக்கக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்க நீ இந்த உலகத்துக்கு வர வேண்டியிருக்கும் என் கண்ணே. வருவாயா? நான் இருப்பேன் என்று நம்புகிறேன். நீ வருவாயா?

'பேசேன், ஏதாவது சொல்லேன்...Please..'

உன் நெருங்கிய சில உறவுகள் உள் நுழைய அறுந்து தொங்கியது எமக்கிடையே பின்னப்பட்டிருந்த மௌனம். அதில் எனக்கானதையும் உன்னதையும் எடுத்து கண்களின் வழி உள்நுழைத்து சேமித்துக் கொண்டு பார்வையால் விடைபெற்றுக் கொண்டு அறையை விட்டு வெளியேறுகிறேன். உன் குரல் தேய்ந்து ஒலிக்கிறது.

அந்த இரவின் கருப்பு மையால் இப்படி எழுதினேன்.

உன் தனிமையை
பாடுவதற்கான ஒரு மொழியை
உனக்கான உறவுகளை
சொல்வதற்கான ஒரு மொழியை
உன் பெருமூச்சுக்களை
உன் சகித்தல்களை
உன் கத்தல்களை
உன் மௌனங்களை
..........................................
உன்னைப் பற்றி
நீ எழுதிவிடக் கூடிய
ஒரு மொழியை
ஒரே ஒரு மொழியை
காலம் உனக்கு சொல்லித் தரட்டும்
அதனைப் புரிந்து கொள்ளக் கூடிய
குறைந்தபட்ச தகுதியையாவது
உன் கடவுள்
எனக்கு வரமாய் அளித்தருளட்டும்..

ஆமென்..!!


நிறைய அன்புடன்,
முத்தங்களுடன்,
மயூ..

6 comments:

 1. வித்தியாசமாக இருக்கிறது. .... நன்றாகவும் இருக்க்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. மற்ற பதிவுகளில் உங்களின் திறமை தெரிகிறது. இதில் உங்களின் காதல் தெரிகிறது. அப்படித்தானே?

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.. முதல் இழையைப் படித்துவிட்டு இதைப் படித்திருந்தால் எது குறித்து எழுதப்பட்டது என்பது புரியும். :)

  http://thurkamano.blogspot.com/2011/05/blog-post_14.html

  :)

  ReplyDelete