Saturday, 14 May 2011

உலகங்களுக்கு இடையிலான இடைவெளியும் மற்றும் நீயும் நானும்..!!!

1.

ஆஸ்பத்திரியின் நுழைவாயிலில் இருந்து வெளியேறி நடைபாதையில் நுழைந்தேன். வெளியில் மழை தூறிக் கொண்டிருந்தது. இளவேனில் காலந்தான். காலம் தாழ்த்திய இளவேனில் பின் கோடை. மரங்கள் தளிர்க்கத் தொடங்கிவிட்டிருந்தன. சில மரங்களின் குட்டி இலைகளை மறைத்தவாறு பூக்கள் கொத்தாக மலர்ந்திருந்தன. பனிக்குள் ஊறிப் போயிருந்த அவை அத்தனை காத்திருப்பையும் இப்படி அழகால் காண்பிக்கின்றன என்று பட்டது. இன்னும் சொற்ப காலத்துக்குத் தான் இது, அல்லவா; நடைபாதையின் புற்தரை செப்பனிடப்பட்டிருந்தது. அங்கங்கே செம்மஞ்சள் நிறப் பூக்கள் பூத்திருந்தன. அது ஒரு வகைக் களையாம். அதனை எப்படி அழிப்பது என்ற புதுவகை மருந்து பற்றி சற்று முன் தான் விளம்பரம் பார்த்தேன். பஸ்சைக் காணவில்லை. தலை பாறையாய்க் கனப்பதான உணர்வு. கால்களுக்கு நடப்பதற்கான சக்தி இல்லை. அவை துவண்டு விழத் தயாராகிக் கொண்டிருந்தன. தண்ணீர் குடித்தால் நல்லம். வயிற்றுக்குள் இருந்து சங்கீதம் கேட்டது. சே, இன்றேதாவது சாப்பிட்டேனா என்ன. ஒரு மண்ணும் நினைவிலில்லை. கையைத் திருப்பி நேரம் பார்த்தேன். இரவு மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. இளவேனிலின் சூரியன் மெல்ல மெல்ல இப்போது தான் மறைந்து கொண்டிருந்தான். என்ன ஒரு நீண்ட நாள். இன்றைய நாள் போல நீண்ட நாட்களை நான் கடந்திருக்கிறேன். இதை நீயும் அறிவாய். இப்படியான பல நாட்களைக் கடந்து போக நீயும் துணை நின்றிருக்கிறாய். இன்று உன்னை அங்கே விட்டுப் படியிறங்கும் பொழுதில் என்னில் இருந்தும் ஏதோ கலைந்து பறந்து வாசல்களிலும், சுவர்களிலும், கட்டிலிலும் படிந்து கொண்டதைக் கண்டேன். இருந்தும் நான் இறங்குவதையோ, இயந்திரமாய் பேரூந்தில் ஏறி வீடு வந்து சேர்வதையோ தடுமாறாமல் செய்து முடித்திருந்தேன். உன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு வந்தேன். நாம் முதன் முதலில் சந்தித்தது, பேசிக் கொண்டது, நட்புப் பாராட்டியது என்று எல்லாம் ஏதோ படத்தின் கதை போல ஞாபகத்தின் காட்சித் திரையில் ஓடிக் கொண்டிருந்தன. நீ அயர்ந்து தூங்குகிறாயா என் கண்ணே? இந்த இரவில், கொடுங்கனவுகளுடன் போராடும் உன்னை எந்த நட்சத்திரங்கள் தாலாட்டும்? எவை மீட்டுக் கொண்டுவரும்? நீ எங்குதான் போனாய்? நான் உன்னுடன் அங்கே நிற்கிறேனா? அந்த உலகத்துக்குள் எனக்கும் ஒரு இடம் இருக்கிறதா என்ன?அதை நான் எப்படி அறியக்கூடும்?

2.

சில வருடங்களுக்கு முந்திய செப்டம்பர் மாதம் அது. அப்போதுதான் உன் பாடசாலையில் வந்து சேர்ந்துவிட்டிருந்தேன். புலம்பெயர்ந்து இரு மாதங்களே கடந்த நிலையில் புதிய நாடு, புதிய சூழல், புதிய மனிதர்கள் என்னும் மிரட்சிப் பார்வை என் கண்களில் இருந்து இன்னும் நீங்கிவிட்டிருக்கவில்லை. ஏதேனும் உறுக்கிக் கேட்டால் உடைந்து ஊற்றிவிடுவேன் என்று கண்ணீர் சுரப்பிகள் மிரட்டிக் கொண்டிருந்தன. ஆங்கிலத்தைப் படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் பேச, பழக, புரிந்துகொள்ள எனக்கு அவகாசம் தேவைப்பட்டிருந்த நாட்கள் அவை. ஒரு மதிய இடைவெளியில் ஓரமாக மேசையில் அமர்ந்து கணக்கு வீட்டுப் பாடத்தை செய்து முடித்துக் கொண்டிருந்தேன். ஊரில் வீட்டுப் பாடமே செய்யாமல் போகும் என்னை வீட்டுப் பாடத்துக்கும் புள்ளிகள் வழங்கப்படும் என்ற கண்டிப்பு செய்ய வைத்துக் கொண்டிருந்தது. என் மேசை அருகே நிழலாடியது. நிமிர்ந்து பார்க்கையில் நீ நின்று கொண்டிருந்தாய். மெலிதாய்ப் புன்னகைத்தேன். சீராக லேயர் கட் வெட்டப்பட்ட விரித்த கூந்தல் அலையலையாய் உன் தோளெங்கும் பறந்து கிடந்தது. வெள்ளை நிறத்தில் கோடைக்குப் பொருத்தமான ஜாக்கெட் ஒன்றை அணிந்திருந்தாய். அதற்குள் கருப்பு நிற டி-ஷேர்ட்டும் கீழே கருப்பு நிறத்தில் டெனிமும் அணிந்திருந்தாய். காதில் அதற்குப் பொருத்தமாக தோடு. பதினாறு அல்லது பதினேழு வயதென்று சொல்லலாம். ஆனால் வயதை நான் எப்போதுதான் சரியாகக் கணித்திருக்கிறேன். நீயும் புன்னகைத்தாய்.

"hi" என்றாய். பேசுவதற்கான ஆயத்தத்தில் வந்திருந்தாய் என்று தோன்றியது.

"hey.!" என்று சொல்லி மீண்டும் புன்னகைத்தேன்.

நீங்கள் தமிழா என்று ஆங்கிலத்தில் கேட்டாய். ஆம் என்றவாறு தலையசைத்தேன். பின் எமது உரையாடல் ஆங்கிலத்திலேயே நீண்டது.

உங்களைப் பற்றி என் தோழி எனக்கு கூறியிருக்கிறாள் என்றாய்.

ஆமாம், அவள் உங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறாள்.

அவளுடன் கணித பாடம் மட்டுந்தானே எடுக்கிறீர்கள்?

ஆமாம் என்று சொல்லி மௌனமானேன். ஆனால் உன் மேலிருந்த பார்வையை தாழ்த்தவில்லை. நீயுந்தான்.

நீங்கள் கணிதம் நன்றாக செய்வீர்களாமே. இப்போது இந்த இடைவேளையிலும் அதனை மீளப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் இப்படிப் படிக்க வேண்டும் என்று தோன்றும், ஆனால் நான் அவ்வாறு செய்வதில்லை. பிறகு படிக்கலாம் என்று அப்படியே கவனமற்று இருந்துவிடுவேன் என்றாய்.

உன்னை அருகில் இருத்தி உன் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றி மறைந்தது, ஆனால் நான் அதற்கும் புன்னகைத்தேன்.

நீங்கள் அழகாக புன்னகைக்கிறீர்கள். மிக சிறிய உதடுகள் உங்களுக்கு என்றாய். நான் அதற்கும் ஒரு புன்னகையையே பதிலாகத் தந்தேன். அப்போது தான் கவனித்தேன் நீண்ட உதடுகள் உனக்கு வாய்த்திருந்தன. நீண்ட அகன்ற மூக்கில் மூக்குத்தி அணிந்திருந்தாய். உன்னுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது. உன்னருகில் அமர்ந்து ஏதேதோ சொல்ல மனது துடித்தது. எங்கே சிறு வயதில் வந்துவிட்ட உனக்கு என்னைப் புரிந்து கொள்ள முடியுமோ என்ற தயக்கமும், வந்த சொற்ப காலத்தில் பட்டறிந்த அனுபவங்களும் அதனை செய்யாதே என்றன. நாம் மௌனமானோம்.


உங்களுக்கு இங்கே நண்பர்கள் கிடைத்திருக்கிறார்களா?"

இல்லை, இன்னும் இல்லை'. (அதே புன்னகை)

எதற்குமே புன்னகைப்பீர்களா என்ன, கவலைப்படாதீர்கள், இனி இடைவேளையின் போது நான் உங்களுடன் இணைந்து கொள்கிறேன். சாப்ப்ட்டுவிட்டீர்களா?

இல்லை, நான் சாப்பாடு கொண்டு வருவதில்லை.

பரவாயில்லை, "Cafeteria" சென்று வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளலாந்தானே.

அது எங்கிருக்கிறது என்றே எனக்குத் தெரியாது. இந்தத் தளத்திலிருக்கும் எனது வகுப்பறைகளைக் கூட கண்டுபிடிக்க குறைந்தது மூன்று முறையாவது முழுத் தளத்தையும் சுற்றி வருகிறேன்.

அப்படியா? வாருங்கள், நாம் ஏதாவது வாங்கி சாப்பிடலாம். பின் உங்கள் வகுப்பில் நான் உங்களை சேர்த்து விடுகிறேன்.

இல்லை, தேவையில்லை. எனக்குப் பசிக்கவில்லை. இன்னொரு நாள் செல்லலாம். நன்றி..

உங்களிடம் "facebook" இருக்கிறதா?

இல்லை, நான் அதனை வைத்துக் கொள்வதில்லை. சில வேளைகளில் MSN வருவேன். அதிலும் நிற்பது குறைவு.

அப்படியா? ம்ம், சரி அப்படியென்றால் என்னை அதில் இணைத்துக் கொள்ளுங்கள். எதேச்சையாக சந்திக்க முடிந்தால் பேசிக் கொள்ளலாம்.

தொலைபேசி இலக்கத்தையும், Hotmail Id ஐயும் பகிர்ந்து கொண்டோம்.

செய்வதற்கு ஏதேனும் இருந்தால் நீங்கள் தொடருங்கள். உங்கள் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.

இல்லை, அப்படியொன்றும் இல்லை. வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தேன். முடித்து விட்டேன். நாம் பேசலாம்.

நீ நின்று கொண்டிருந்தாய். உன்னை நிற்கவைத்து நான் அமர்ந்திருப்பது எனக்கு சங்கடத்தைத் தந்தது. நீயும் அதனை உணர்ந்து கொண்டாய் போல் தோன்றியது. அருகில் இருக்கும் வகுப்பறையைக் காட்டி, நாம் அங்கே அமர்ந்து கொள்ளலாம். அந்த ஆசிரியர் எதுவும் சொல்லமாட்டார். வாருங்கள் என்றாய். நான் எனது புத்தகங்களையும் பையையும் எடுத்துக் கொண்டு உன்னைத் தொடர்ந்தேன்.

இப்போது நீ நிறையப் பேச ஆரம்பித்தாய். ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழில் உன்னைப் பற்றி உன் குடும்பம் பற்றி உன் நண்பர்கள் பற்றி, நிறைய நிறைய சொன்னாய். அவற்றில் நிறைந்திருந்த என் மேலான நம்பிக்கையை, அப்போது தான் ஆரம்பித்து விட்ட என் மேலான பாசத்தை நான் உணர ஆரம்பித்திருந்தேன். உன்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது. நானும் என்னைப் பற்றிப் பகிர்ந்து கொண்டேன். உன்னால் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்காது என்று நான் நினைத்துக் கொண்ட சிலவற்றைத் தவிர்த்து ஏனையவற்றைப் பகிர்ந்து கொண்டேன்.

உங்களுக்கு காதலன் இருக்கிறாரா? அவர் எங்கிருக்கிறார்? என்றாய்.

இல்லை, எனக்குக் காதலில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் காதல் செய்யும் அளவுக்கு நம்பிக்கை இல்லை என்றேன்.

இது உனக்கு விளங்கியிருக்காது என்று தோன்றியது. அப்படி நான் சொல்லியிருக்க வேண்டியிருக்கவில்லை. ஒரு மணித்தியால இடைவேளை எவ்வளவு சீக்கிரமாய் முடிந்து போனது.

3.

வீடு வந்து சேர்ந்துவிட்டிருந்தேன். மணி ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருந்தது. உடை மாற்றி வீட்டிலிருப்பவர்களின் உன்னைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லி அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொள்கிறேன். மனமெல்லாம் நிறைந்து வழிகிறாய் நீ. யன்னலைத் திறந்து திரைச்சீலையை ஓரமாய்த் தள்ளுகிறேன். மழை தூறிக் கொண்டிருந்தது. தெரு விளக்குகளின் மங்கிய வெளிச்சத்துடன் போராடிக் கொண்டிருந்த முன்னிருட்டில் மழைத் துளிகள் மெலிதாய்ப் பளபளத்தவாறே மண்ணில் வீழ்ந்தன. குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.

நேற்றைக்கு முந்திய தினம், மதியம் என்னை நீ அழைத்தாய். வகுப்பிலிருந்ததால் அதனை நான் தவற விட்டிருந்தேன். மீண்டும் உன்னைத் திருப்பி அழைத்தேன்.

"நான் நாளைக்கு வாறன், நாங்கள் வெளியில போகலாம். போய்ப் படம் பார்க்க வேண்டாம். எங்காவது கோவிலுக்கு, சேர்ச்சுக்குப் போகலாம். பிறகு டின்னர் சாப்பிட்டுவிட்டு வீட்ட வரலாம்" என்றாய்.

"sure, நான் வகுப்பு முடிந்ததும் அப்படியே நேராக உங்கட வீட்ட வாறன். சேர்ந்தே போகலாம். நான் இப்போது வரவா? எனக்கு அடுத்த பாடம் போக வேண்டியதாக இல்லை."

"வேணாம், எனக்கு வேலையிருக்கு. நான் ஏற்கனவே Sunday போகவில்லை. அவர்கள் தவறாக நினைப்பார்கள்"

"எனக்கென்னவோ நீங்கள் வேலையிலிருந்து விட்டு எடுப்பது நல்லது போலத் தோன்றுகிறது. வீட்டில் நின்று ஓய்வெடுங்கள். நாம் நாளை சந்திக்கலாம். ஏற்கனவே திட்டமிட்டது போல இந்த வெள்ளிக் கிழமையை உங்களுடன் உங்கள் வீட்டில் கழிக்கலாம். சமைத்து சாப்பிடலாம். சனிக்கிழமையில் இருந்து நீங்கள் வேலைக்குப் போனால் நல்லது."

"புரிகிறது, எனினும் இன்று வேலைக்குப் போகாதுவிட மனம் ஒப்பவில்லை. போய் வருகிறேனே."

"ம்ம், சரி.. எனக்குத் தொலைபேசுங்கள். நான் வீடு செல்ல இன்று இரவு பதினொரு மணியாகிவிடும். அதன் பிறகு நான் உங்களை அழைக்கிறேன். இல்லைஎன்றால் நாளை காலையே அழையுங்கள். எனக்கு வகுப்பு இரண்டு மணிக்குத் தான் ஆரம்பமாகும்."

"சரி, அப்படியே செய்கிறேன். I love you chellam, Take care."

"I love you too, kisses, Take care. Don't forget to call me even if it is 1 am in the early morning."

புன்னகைத்தாய், "Surema, Love you, miss you.."

"Bye then, Take care" - என்றவாறு போனை வைத்தேன்.

அடுத்தநாள் அழைத்திருந்தாய். நான் மீண்டும் அழைத்தபோது நீ போனை எடுக்கவில்லை. அன்றைய பின்னிரவில் நீ எங்கோ தொலைந்து போனாய்..

Yeah, I miss you... I have missed you somewhere..!!!!

"இந்த இரவில், கொடுங்கனவுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் உன்னை எந்த நட்சத்திரங்கள் காப்பாற்றும்? எவை மீட்டுக் கொண்டு வரும்?"

நான் மேசையில் அமர்ந்தேன். ஒன்றிலும் மனமில்லை. நீயே என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்தாய். உன்னை உணர்கிறேன் என்னருகே, என் மடியில், என் கை விரல்களின் இடுக்கில்..என்னுள் நிறைகிறது உனக்கே உனக்கான உன் வாசம். உன்னை வா போவென்று அழைப்பது எனக்கு சாத்தியப்பட்டிருக்கவில்லை. இத்தனை வருட நட்பிலும் அப்படி என்னை அழைப்பதை நீயும் தவிர்த்தாய். நான் யாரை வா போவென்று கூப்பிடுவேன் என்று எனக்கும் மறந்து போயிற்று. இதைப்பற்றி பேசியுமிருக்கிறோம். நீ என்னை அறிந்ததைப் போல வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை நானும் வழங்கியிருக்கவில்லை. எனக்குள் நீ நுழைந்ததைப் போல நான் உனக்குள் நுழைந்திருக்கவில்லையா? அப்படி நுழைவதற்கான சாத்தியங்கள் இனி இருக்கிறதா என்ன? உன்னை எந்தப் பொழுதில் நான் புரிந்து கொண்டிருக்கவில்லை? எங்கே தவறிழைத்தேன்? கேள்விகள், ஆயிரமாயிரம் கேள்விகள், என்னைச் சாட்டையால் அடிக்கின்றன. நான் என்ன செய்யட்டும், சொல்லேன்...!!!!

மணி பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. நேற்றிரவு ஒரு மணியளவில் என் Facebook க்கு வந்த உன்னைப் பற்றிய செய்தியை போனுக்குள் நுழைத்து விட்டிருந்தது தொழில்நுட்பம். இந்தத் தொழில் நுட்பந்தான் எம்மைப் பிரித்தும் வைத்தது இல்லையா. இப்படி ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டால் மற்றவர்களை இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்குமா? வழக்கமில்லா வழக்கமாக நான் நேரத்துக்கே படுக்கப் போயிருந்தேன். அதனைப் படிக்கும் போது மூன்று மணியிருக்கும். உன்னைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. அந்த நேரத்தில் என்னை எப்படி எதிர்கொள்வதென்று உனக்கும், உன்னை அந்த நிலையில் பார்ப்பது எனக்கும் பொருத்தமில்லை என்று நானும் உன் உறவும் கருதியதால் போனை என் அலுமாரிக்கு மேல் எறிந்தேன். இரண்டாகப் பிளந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தன பாகங்கள். அப்படியே போர்வைக்கும் சுருண்டு ஒடுங்கினேன். அம்மா திடுக்கிட்டு எழுந்தார்.

"அம்மா....அவளை மீட்டுத் தாருங்கள். நான் என் பக்க தவறுகளை சரி செய்கிறேன். இனி இப்படி அவளுக்கு நேராமல் பார்த்துக் கொள்கிறேன்.!! அவளுடன் யாராவது போங்களேன்..நான் தோற்றுவிட்டேன், நட்பில், அன்பில் தோற்றுவிட்டேன்..நீங்களாவது முயலுங்கள், யாராவது..! அம்மா..!!"

பின் வந்த மணித்துளிகளை பிணங்களும், பிசாசுகளும், இரத்தத்தில் தோய்ந்த என் நிலமும் கனவுகளாய் வந்து நிரப்பின. நான் தூங்குவதும், பிசத்துவதும் எழுந்து படுப்பதுமாய் இருந்தேன். அம்மா அதன் பின் தூங்கவில்லை. நானும் தான்..

இப்போது இரவு பதினொன்றாகிறது. எங்காவது போக வேண்டும் என்று தோன்றியது. உன்னை நோக்கி என்னை அழைத்து வரக்கூடிய ஒரு பயணம். நான் போனையும் எனது மெட்ரோ பாஸையும், ஜிம் அனுமதி அட்டையையும் எடுத்துக் கொண்டு கதவைத் திறக்கிறேன். அம்மாவின் எங்கே போகிறாய் என்ற கேள்விக்கு எனது ஆடை பதில் சொல்லியிருக்கவேண்டும்.

"இந்த நேரத்திலையா?"
"Yeah, காலமை போகக் கிடைக்கேல,"
"நீ இப்ப ஓரிடமும் போகாத, கூட யோசிச்சுக் கொண்டிருக்கிறாய்" இது அப்பா.
"என்னை அங்க கொண்டுபோய் விடுவீங்களா? நான் ஒரு மணித்தியாலத்தில வந்திடுவன்; இல்லை, பஸ்சில போறன், வந்தேத்துவீங்களா?"
"சரி, நீ போ, நான் ஏத்த வாறன், போன் பண்ணு."
"சரி, போயிற்று வாறன்."

இரவு பதினோரு மணித்தெரு வெறிச்சோட ஆரம்பித்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலை விட்டு வந்து கொண்டிருந்தார்கள். சிலர் கூடி நின்று சிகரெட் பிடித்துக் கொண்டும் கதைத்துக் கொண்டுமிருந்தனர். போட்டிருந்த துணி ஜாக்கெட்டுக்கு உள்ளாக ஊடுருவி கூதல் காற்று உடல் தழுவியது. உரோமக் கால்கள் சிலிர்த்து எழுந்தன. இப்படி ஒரு இளவேனிற்கால இரவில் நாம் தூரமாக நடந்து போக வேண்டுமென்று நீ சொல்லியிருந்தாய். தலை சாய்த்து, தீர்க்கமான பார்வையுடன் நீ கேட்கும் எதையும் மறுக்கத் தோன்றாது. மறுக்கக் கூடிய எதையும் நீ கேட்டதுமில்லை. நீ கேட்பது எல்லாமே எனக்குப் பிடித்தவையும் கூட. இந்த இரவு, இந்த அமைதி எனக்குப் பிடிக்கும் என்று நீ அறிவாய். என்னுடன் பேசும் போதெல்லாம் இரவை நேசிக்கப் பழகுவதாக நீ சொல்வாய். அதை உனக்கு மிகவும் பிடிக்கிறது என்றாய். எனக்குத் தெரியும் நீ என்னை மட்டுமில்லை என் விருப்பங்களையும் என் குறைகளையும் நிறைகளையும் என் சார்ந்த எல்லாவற்றையும் நேசித்தாய். நேசிக்க முயற்சித்தாய். இல்லாவிட்டாலும் கூடவே அருகிலிருந்தாய்.

நான் இரவையும், குளிர் காற்றையும் ஊடறுத்து நுழைகிறேன். என் பின்னால் இருட்டும் குளிரும் குழைந்து இறுகி மூட்டமாய் மூடுகின்றன நான் வந்த வழியை. எனது மீளலின் போது இந்த பேரமைதியை, வழி தெரியா இந்த இருட்டை நான் எப்படித் துளைத்து நுழைவேன். புரியவில்லை. நீயும் இப்படித்தானே, எங்கோ ஒரு உலகத்துக்குள் நுழைந்து வழி தெரியாது களைத்துப் போனாய். கேட்கப்படாத கேள்விகள் உன் மனமெங்கும் நிறைந்திருக்கின்றன. அவற்றுக்கான பதில்களும் யாராலும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. அவற்றுடன் நானறியா, நான் நீக்கலின் ஊடாயும் எட்டியும் பார்க்கவியா அந்த உலகில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன் கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்து விட்டனவா? அந்த உலகம் நீ எதிர்பார்த்த அனைத்தையும் தந்துவிடக் கூடியதா? அங்கு என்னை அழைத்துப் போகவாவது நீ வருவாயா? இல்லை, இனி உனக்கு என்னைத் தேவையாகவிருக்காதா? சொல்லேன், தயவு செய்து சொல்லேன்.

சில நிமிடங்கள் எடுத்த காத்திருப்பின் பின் பஸ் வந்தது. கூட்டமே இல்லை. கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு ஜன்னலில் தலை வைத்து சாய்ந்து கொண்டேன். நான் எங்கே போகிறேன், எதற்காகப் போகிறேன் என்பதெல்லாம் மறைந்து வேறுமையாகியது இந்த உலகம். இப்படி ஒரு பயணத்தில் உன்னுடன் இணைந்து கொள்ள முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். நீ எங்கிருக்கிறாய் இப்போது?


தொடரும்...!

8 comments:

 1. அழகான நடையில் எழுதப்பட்ட கதை. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.

  ReplyDelete
 2. /இல்லை, எனக்குக் காதலில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் காதல் செய்யும் அளவுக்கு நம்பிக்கை இல்லை என்றேன்./

  என்ன அழகான வரிகள்

  ReplyDelete
 3. எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறீர்கள்... முதலில், உங்கள் வயதுக்கு அற்புதமாக எழுதுகிறீர்கள் என்று தோன்றியது. பிறகு... வயதுக்கும் எழுத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தோன்றியது.

  ReplyDelete
 4. வித்தியாசமான உரை நடையில் எழுதியிருக்கிறீர்கள். கால வோட்ட மாற்றத்தில் கரைந்து போன நினைவுகளைக் கொண்டு கதையினை நகர்த்திச் செல்லுகிறீர்கள். உரை நடை, மொழி வழக்கு முதலியன கதைக்கு அழகு சேர்க்கின்றது.

  ReplyDelete
 5. நன்றி தமிழ்நதி, வந்தியத்தேவன், பிரபாஷ்கரன், நிருபன் மற்றும் விஜய் மகேந்திரன். நன்றி.

  ReplyDelete
 6. அருமையான நடை ...வாசகரை உடன் அழைத்து செல்லும் வார்த்தைகள் ...அடுத்த பகுதிக்கான காத்திருப்பு இப்போதே துவங்குகின்றது

  ReplyDelete
 7. kaviththuvamaana nadai ungalukku vaaiththirukkiradhu...vaazhththukkal...!yazhinimunusamy.blogspot.com

  ReplyDelete